திண்டுக்கல் : மதுரை தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே அமலிநகர் பகுதியிலுள்ள ஜாதி கவுண்டன்பட்டி என்ற பகுதி மக்களுக்கு சொந்தமான குளத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள், ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றின் மூலம் இரவு பகலாக மணல் கொள்ளை நடப்பதாக அப்பகுதி மக்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து செய்தி சேகரிக்க சென்ற நிலையில், அந்நபர்கள் செய்தியாளர்களை கண்டதும் டிப்பர் லாரிகளை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.
திமுகவைச் சேர்ந்த ஆத்தூர் ஒன்றிய செயலாளர் முருகேசன், ஆத்தூர் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கணேசன் உள்ளிட்டோர் இந்த மணல் கொள்ளையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த கிராவல் மண் கொள்ளை சம்பந்தமாக பொதுமக்கள் யாராவது இவர்களிடம் கேட்டால், அவர்கள் மக்களை மிரட்டி வருவதாகக் கூறப்படுறது.
இரவு பகலாக மணல் கொள்ளை
மேலும், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கனிமவளத்துறை அலுவலர்களிடம் சீட்டு பெற்றுள்ளதாகக் கூறி ஆறுகள் குளங்கள் ஏரிகளில் தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக இரவு பகலாக மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.
இது போன்ற கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டு வரும் நபர்களை உடனடியாக கைது செய்து இவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும், கனிம வளக் கொள்ளையில் ஈடுபடுபவர்கள், தங்கள் வாகனங்களை அதிவேகமாக செலுத்துவதால் பெரும் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க : நியாய விலைக்கடைகளில் மக்களை அலைக்கழித்தால் நடவடிக்கை - அரசு எச்சரிக்கை