திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நான்கு கிராம உதவியாளர் பணியிடங்கள் சமீபத்தில் நிரப்பப்பட்டன. அவைகள், வடகவுஞ்சி, வெள்ளகெவி, காமனூர், பாச்சலூர் ஆகும். இந்தப் பணியிடங்கள் ஒன்றிற்கு ஆறரை லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வழங்கியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
அந்த ஆடியோவில், இந்த அரசுப் பணிக்காக ஒன்றிய செயலாளர் மூலம் இந்தப் பணம் அளிக்கப்பட்டது. வட்டாசியர் உள்ளிட்டோருக்கு மூன்று லட்சம் ரூபாய் வரையும் இதில் லஞ்சம் வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவல்துறையினர் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய்த்துறை உயர் அலுவலர்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு தாலுகாவிற்கு மட்டும் இத்தனை லட்ச ரூபாய் லஞ்சமாக கைமாறப்பட்டால் தமிழ்நாடு முழுவதும் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு இதுபோல் எவ்வளவு தொகை கைமாற்பபட்டிருக்கும் என்ற கேள்வியும் அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. இதுபோன்று தேர்தலுக்கு முன்பு புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவர்களிடம் லஞ்சம் அளித்தது தொடர்பான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அவர்களது பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.