திண்டுக்கல் லயன் தெருவைச் சேர்ந்தவர் மனோஜ் (24). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த குமரவேல் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்பகை இருந்துவந்த நிலையில் கடந்த ஞாயிறன்று செல்லாண்டியம்மன் கோயில் தெரு பகுதியில் சுமார் 20 நபர்களால் மனோஜ் தாக்கப்பட்டார்.
இதையடுத்து, பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய அவரை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுப்பிவைத்தனர். அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், அங்கு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று மனோஜ் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது சடலத்தைப் பெற்ற உறவினர்கள் ஏற்கனவே இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஆறு பேரும் வழக்கிற்குச் சம்பந்தம் இல்லாதவர்கள் என்று குற்றஞ்சாட்டி, இந்த வழக்கில் தொடர்புடைய உண்மையான 20-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளைக் கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தி சடலத்தை வைத்துக் கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் திருச்சி சாலை சந்திப்பில் கல்லறைத் தோட்டம் அருகே நடைபெற்ற மறியல் காரணமாக சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் உடனடியாகக் குற்றவாளிகளைக் கைதுசெய்வதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் சடலத்துடன் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க: உங்களில் ஒருவனாக இருந்து சேவையாற்றுவேன் - அரவக்குறிச்சி திமுக வேட்பாளர்