திண்டுக்கல்: செம்பட்டி அருகே உள்ள வக்கம்பட்டியில் பழமையான மரிய மதலேனாள் கிறிஸ்தவ ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் மக்கள் திருவிழா கொண்டாடி வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பாதிப்பினால் திருவிழா கொண்டாடப்படவில்லை. தற்போது மக்கள் திருவிழா கொண்டாட முடிவெடுத்துள்ளனர்.
இதில் கோயில் நிர்வாகத்தினர் இருதரப்பினர் இடையே கருத்து வேறுபாடு உள்ளதால் ஒருதரப்பினர் திருவிழா கொண்டாட கூடாது என்றும் மற்ற தரப்பினர் திருவிழா கொண்டாட வேண்டுமெனவும் கூறிவந்துள்ளனர். இதில் ஒருதரப்பினர் மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்து திருவிழா கொண்டாட அனுமதி பெற்றதாக தெரிகிறது. பிஷப் அவர்களிடமும் அனுமதி பெற்றுள்ளதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனை அடுத்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் பொதுமக்கள் திருவிழா கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டு மனு அளித்துள்ளனர்.
மற்றொரு தரப்பினரும் திருவிழா கொண்டாட கூடாது என காவல் துறையினரிடம் புகார் மனு கொடுத்ததாக தெரிகிறது. இதில் இரு தரப்பினருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. ஆத்தூர் வட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் திண்டுக்கல் தாலுகா காவல் துறையினர் திருவிழா கொண்டாட அனுமதி தர மறுப்பதாக கூறி திண்டுக்கல் செம்பட்டி சாலையில் 200-க்கும் மேற்பட்டோர் வக்கம்பட்டியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த திண்டுக்கல் தாலுகா காவல் துறையினர் மற்றும் அம்பாத்துரை காவல் துறையினர் பொதுமக்களிடம் பேசி உரிய தீர்வு காணப்படும் என கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இரண்டு நாட்களுக்குள் தீர்வு காணப்பட வில்லை எனில் மீண்டும் சாலை மறியல் செய்யப்போவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சாலை மறியலால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பொறியியல் சேர்க்கை: முதல் நாளிலேயே 18ஆயிரம் பேர் பதிவு