திண்டுக்கல்: தமிழ்நாட்டின் சுற்றுலாத் தளங்களில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய பங்கு வகித்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் பட்ஜெட் ஃபிரெண்டிலி இடமாகவும் இருந்து வருகிறது. இங்கு வனத்துறை கட்டுப்பாட்டில் மோயர் சதுக்கம், குணா குகை, தூண் பாறை என பிரமிக்க வைக்கும் பல்வேறு இடங்கள் உள்ளது.
தற்போது இங்கு பல்வேறு வகை பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன. இதனை காண சுற்றுலா பயணிகள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில், நகர் பகுதியில் பிரையன்ட் என்ற பூங்கா ஒன்று அமைந்துள்ளது. தற்போது இந்த பூங்காவில் பல்வேறு வகையில், பல லட்சம் மலர்கள் பூத்துக் குலுங்கி வருகிறது. இதற்கு முன்பு, முதல் பருவத்திலும் இது போன்று பல்வேறு வகையிலான பூக்கள் பூத்துகுலுங்கின. அந்த வகையில் தற்போதும் அதிகளவிலான பூக்கள் பூத்துள்ளது.
தற்போது இரண்டாம் சீசன் நடைபெற்று வரும் நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக காஸ்மாஸ், லுப்பின்ஸ், டேலியா, ரோஜா, சால்வியா என பல்வேறு மலர்கள் கண்ணை வியக்கும் அளவில் பூத்துக் குலுங்கி வருகிறது. வார விடுமுறை நாட்களிலும் மற்றும் தொடர் விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தே வருகிறது. இந்நிலையில், இரண்டாம் சீசனில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால், பிரையன்ட் பூங்காவில் சிறப்பு மலர் கண்காட்சி நடத்த வேண்டும் என கோரிக்கையும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இதையும் படிங்க: நவராத்திரி விழா; திருவனந்தபுரம் புறப்பட்ட 3 சாமி விக்கிரகங்களுக்கு கேரள காவல்துறை அணிவகுப்பு!