திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதியின் பெரும்பாலான இடங்கள் இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான வனப்பகுதியாக இருந்து வருகிறது. இது தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த சுற்றுலாத்தலமாக மட்டுமின்றி, எண்ணற்ற வன உயிரினங்களுக்கு வாழ்விடமாக உள்ளது என்பதனை நம்மில் பலரும் பல நேரங்களில் சிந்தித்துப் பார்க்காமல் உள்ளோம்.
இதன் விளைவு, இயற்கையான சுற்றுச்சூழல் நிறைந்த இடங்களுக்கு நாம் மகிழ்ச்சியாக செல்வதோடு மட்டுமல்லாமல், வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் மது அருந்திவிட்டு சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றோம்.
அவ்வாறு பயன்படுத்திய மதுபாட்டில்களை வனப்பகுதிக்குள்ளும் தூக்கி வீசுகிறோம். இதனால், வனப்பகுதியில் உலாவரும் காட்டெருமை, மான், பன்றி, சிறுத்தை, யானை, உள்ளிட்ட வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயத்திற்கு தள்ளப்படுகின்றன.
மனிதர்கள் செய்யும் விரும்பத்தகாத செயல்பாடுகளினால் ஏன் வன உயிரினங்கள் பாதிக்கப்பட வேண்டும் என்கிற கேள்வியை இது போன்ற தவறுகளை செய்பவர்கள் சிந்திக்கவேண்டும். அதே நேரம்,
நாட்டைக் கெடுக்கும் மதுபோதைக் கலாசாரம் வன உயிர்களின் வாழ்க்கைக்கும் உலை வைப்பதைத் தடுப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசும் எடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் காட்டுத்தீ..! குரல் கொடுத்த கார்த்தி...