திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பகல் இரவு நேரங்களில் கனமழை பெய்துவருகிறது. நகர் பகுதி மட்டுமின்றி பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தும் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே தொடர்ந்து பெய்த கனமழையால் பாம்பார்புரம் பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தின் மீது மரம் சாய்ந்ததில் முதியோர் இல்லம் பெரும் சேதமடைந்தது. இதனால் அங்கிருந்த முதியோர்கள் பெரும் அவதியடைந்தனர். முதியோர் இல்லத்தின் அருகே உள்ள ஆபத்தான மரங்களை அகற்ற வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
"ரெட் அலர்ட்" எதிரொலி
தேசிய வானிலை ஆய்வு மையத்தின் முன்னெச்சரிக்கை காரணமாக திண்டுக்கல் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு "ரெட் அலர்ட்" விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலா தலங்களான மோயர் பாயின்ட், குணா குகை, பேரிஜம், பைன் மரக்காடுகள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் அனைத்தும் இரண்டு நாட்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வருவாய் கோட்டாசியர் சுரேந்திரன் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று அறிவுரை வழங்கினார்.
கொடைக்கானலில் இன்று காலை முதலே லேசான மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான சாரலும் பெய்து வருகிறது. மேலும் ரெட் அலர்ட் எச்சரிக்கையின் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையின்றி காணப்பட்டது. இதனால் நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடியது. சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததால் சுற்றுலாப் பயணிகளை நம்பி இருக்கும் சிறு வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் - பாதுகாப்பு ஏற்பாடு குறித்து அறிக்கை வெளியீடு