தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
தடுப்பூசி பற்றாக்குறை
ஆனால் கடந்த சில நாள்களாக தடுப்பூசி தட்டுப்பாடு மாநிலத்தில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மக்கள் கடந்த ஐந்து நாள்களாக தடுப்பூசி செலுத்துவதற்காக திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர். தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக ஏதேனும் காரணங்கள் கூறப்பட்டு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
நேற்று (ஜூலை.14) தடுப்பூசி செலுத்துவதற்காக காலை ஐந்து மணி தொடங்கி சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் வரிசையில் நின்றுள்ளனர். இந்நிலையில் திடீரென தடுப்பூசி தீர்ந்துவிட்டதாகவும், ஒரு சிலருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த முடியும் எனவும் கூறி, ஒரு சிலருக்கு மட்டும் முன் பதிவுக்கான அட்டையைக் கொடுத்துவிட்டு, மற்றவர்களை தடுப்பூசி வந்தவுடன் மீண்டும் வருமாறு கூறிவிட்டு மருத்துவமனை ஊழியர்கள் சென்றுவிட்டனர்.
பொதுமக்களின் வேதனை
இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள், “தடுப்பூசி கையிருப்பில் எவ்வளவு இருக்கிறது என்று கூட சொல்லாமல் மருத்துவமனை நிர்வாகம் எங்களை அலைக்கழித்து வருகிறது. தமிழ்நாடு அரசு தொலைக்காட்சி, சமூக ஊடகங்களில் தினமும் மருத்துவமனைப் பணியாளர்கள், சமூக ஆர்வலர்களைக் கொண்டு தடுப்பூசி பற்றாக்குறை இல்லாமல் முகாம் நடத்தி வருவதாகக் கூறி வருகின்றனர்.
இதை நம்பி நாங்கள் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து எங்களது வேலையையும் விட்டுவிட்டு இங்கு வருகிறோம். சம்பளத்தை விட்டு தடுப்பு முகாமுக்கு வந்தால் இவர்கள் சரியான பதிலைச் சொல்வது கிடையாது.
தடுப்பூசி முகாம் நடைபெறுகையில் எத்தனை பேருக்கு தரமுடியும் என்பதை முதலிலேயே சொல்லி விட்டால் நாங்கள் அதற்கு ஏற்றார்போல் தடுப்பு முகாமில் கலந்து கொள்வோம்” என வேதனையுடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஒரேநாளில் 18 ஆயிரம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி - மாநகராட்சி