திண்டுக்கல்: நத்தம் அருகே பெரிய மலையூர் - வலசு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (40). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று (ஆக.26) குட்டுப்பட்டி அருகே உள்ள தி.நகர் பகுதியில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், பெரியசாமியை காருடன் கடத்திச் சென்றனர்.
அலைபேசி அழைப்புகள் ஆய்வு
பின்னர் இது தொடர்பாக மாவட்ட துணை கண்காணிப்பாளர் சுகுமாறன், காவல் ஆய்வாளர் ராஜமுரளி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து, குற்றவாளிகளைத் தேடும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவிட்டார்.
விசாரணையில் பெரியசாமியின் அலைபேசி அழைப்புகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது பெரியசாமியின் அலைபேசியில் பேசிய நபர்கள் மேலூர் பகுதியில் மறைந்திருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அங்கு விரைந்த காவலர்கள், சருகுவலையபட்டி பகுதியில் பெரியசாமி கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்ததை கண்டறிந்து அவரை மீட்டனர். பின்னர் பெரியசாமி, அவரது குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பட்டார்.
தொழிற்போட்டியின் காரணமாக கடத்தல்
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தொழிற் போட்டியின் காரணமாக பெரியசாமி கடத்தப்பட்டது தெரிய வந்தது.
கடத்தப்பட்ட 12 மணி நேரத்தில், ரியர் எஸ்டேட் தொழிலதிபரை பத்திரமாக மீட்ட காவல்துறையினருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: 9 கிலோ தங்கம் கடத்திய கும்பல் கைது