திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வடகவுஞ்சி பஞ்சாயத்திற்குள்பட்ட பட்டியக்காடு கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்துவருகின்றன. கடந்த 7 மாதத்திற்கு முன்பு அப்பகுதியில் கிராம பஞ்சாயத்து உறுப்பினராக பிறை சொர்க்கர் செல்வம் (30) என்பவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இந்நிலையில் அப்பகுதியிலுள்ள பெண்களுக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்துவருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதற்கிடையே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனையறிந்த சிறுமியின் உறவினர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர்.
ஆனால், பஞ்சாயத்து உறுப்பினர் பிறை சொர்க்கர் செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து கொடைக்கானல் மகளிர் காவல் நிலையத்தில் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.