பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஒருவார காலம் விழாவாக பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பழனியை அடுத்த நெய்க்காரபட்டி பேரூராட்சி பாஜக தலைவர் பாலுச்சாமி(60) பாஜக மீது தீராத பற்றுடையவர் ஆவார். இவர் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு இனிப்பு வழங்குவது, பதாகைகள் வைப்பதைத் தவிர்த்து பயனுடைய செயலை செய்ய வேண்டும் என தீர்மானித்து பழனி சண்முக நதியைத் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டார்.
பிரதமரின் முக்கிய திட்டமான சுவச் பாரத் மக்களைச் சென்றடைந்துள்ள நிலையில் தூய்மைப் பணியே சிறந்தது என முடிவு செய்து இப்பணியைத் தனிநபராக மேற்கொண்டார். காலை முதல் மாலை வரை சண்முக நதியில் உள்ளே கிடந்த துணிகள், குப்பைகள், நெகிழிப் பைகள் ஆகியவற்றைத் சேகரித்து அருகேயிருந்த ஊராட்சி குப்பைக் கிடங்கில் சேர்த்தார்.
பின்னர் மீன்களுக்கு வேண்டிய இரைகளை வழங்கிய பாலுசாமி சண்முக நதிக் கரையில் நடைபெற்ற நதி தீபாராதனை நிகழ்ச்சிக்கு வேண்டிய ஏற்பாடுகளையும் தனிநபராக ஏற்றுக் கொண்டார். அவரது தூய்மைப் பணியை பலரும் பாராட்டிச் சென்றனர்.