திண்டுக்கல்: ஆத்தூர் தாலுகா கன்னிவாடி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி. மாடு வியாபாரியான இவருக்கு சுமதி என்ற மனைவியும் ஜீவா என்ற மகளும் முத்துக்குமார் என்ற மகனும் உள்ளனர். தற்போது இரு பிள்ளைகளுக்கும் திருமணம் முடிந்தது. மகன் முத்துக்குமார் கோயம்புத்தூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகள் ஜீவாவை கன்னிவாடி அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமாருக்கு திருமணம் முடித்து வைத்து ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
ஜீவா தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 1 ஆண்டிற்கு முன்பு செந்தில்குமார் ஒரு விபத்தில் சிக்கி தலை மற்றும் இடுப்பு கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டு கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த கான்ட்ராக்டர் சுரேஷ் என்பவர் செந்தில்குமாருக்கு உதவி செய்வதாக கூறி ஜீவாவிடம் பழகி வந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து இருவருடைய நட்பும் ஒரு கட்டத்திற்கு மேல் திருமணம் மீறிய உறவாக மாறியுள்ளது. அப்போது சுரேஷ், ஜீவாவிடம் இனி உன் கணவரால் உன்னை காப்பாற்ற முடியாது. நீ தான் வேலைக்குச் சென்று காப்பாற்ற வேண்டும். ஆகையால் நீ என்னுடன் வாழ்ந்தால் உன்னை நான் காப்பாற்றுவேன் என ஆசை வார்த்தை கூறி நிலக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தில் தனி வீடு எடுத்து இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஜீவாவின் கணவர் செந்தில்குமார் மனைவி காணவில்லை என கன்னிவாடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதன்பின் சுரேஷ் மற்றும் சின்னாளப்பட்டி வழக்கறிஞர் தேவராஜ் ஆகியோருடன் கன்னிவாடி காவல் நிலையத்திற்கு ஜீவா வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, சமரச பேச்சுவார்த்தைக்கு பின்னர் அந்த பெண்ணை கணவர் ஊருக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு சென்ற ஜீவா 3 நாட்களுக்கு பிறகு கடந்த மாதம் 24 ஆம் தேதி வீட்டு தோட்ட பகுதியில் தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு திண்டுக்கல் அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தன்னுடைய இந்த நிலைமைக்கு சுரேஷ் மற்றும் வக்கீல் தேவநாதன் தான் காரணம் என வாக்குமூலம் அளித்ததாகவும் கூறப்படுகிறது. அதை எடுத்துக் கொண்டு ஜீவாவின் கணவர் செந்தில்குமார் மற்றும் பெற்றோர் பெரியசாமி ஆகியோர் கன்னிவாடி காவல் நிலையத்தில் தன்னுடைய மகளின் தற்கொலைக்கு காரணமான சுரேஷ் மற்றும் வக்கீல் தேவராஜன் கைது செய்ய புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் தேவராஜ் திமுக வழக்கறிஞர் பிரிவில் பொறுப்பில் இருப்பதால், தேவராஜ் மற்றும் சுரேஷ் ஆகியோர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும், தனது மகளின் சாவுக்கு காரணமான இருவரையும் கைது செய்ய வேண்டும் எனவும் மகளை இழந்த பெற்றோர்கள் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: மனைவியை கடத்திய கணவர்.. மகளை மீட்டுத்தர தாய் கோரிக்கை.. வெளியான ஆடியோ!