திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள வாலிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் மாயவன். இவரது மகன் கௌதம். இச் சிறுவன் பிலாத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 11) சிறுவன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், வீட்டுப்பாடம் செய்யாமல் பள்ளிக்குச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பள்ளி ஆசிரியை சாந்தி என்பவர், சிறுவனை பிரம்பால் அடித்து, நகத்தால் கிள்ளி வைத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், மாணவனின் உடலில் ரத்த காயங்கள் மற்றும் உள் காயங்கள் இருந்துள்ளன. இந்தநிலையில் மாலையில் வீடு திரும்பிய மாணவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பெற்றோர் விசாரித்தபோது, தன்னை பள்ளி ஆசிரியை அடித்து, கிள்ளி வைத்ததாகக் கூறியுள்ளான். பின்னர், சிறுவனின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
மேலும், ஆசிரியை சாந்தி பள்ளியில் படிக்கும் வேறு சில மாணவர்களையும் அடித்து, கிள்ளியதாக மாணவரின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். எனவே சிறுவனைத் தாக்கிய ஆசிரியை சாந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இதே போல், வேலூரில் உள்ள இளவம்பாடி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்றில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கம்மார்பாளையம் பகுதியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
மேலும், மாணவிகளுடைய வகுப்பு ஆசிரியை தீபலட்சுமி, மாணவிகளின் வீட்டுப் பாடத்தை திருத்திக் கொண்டிருக்கும் போது சில இடங்களில் கலர் பேனாவால் எழுத வேண்டும், ஏன் சாதாரண பேனாவால் எழுதினீர்கள்? எனக் கேட்டு கட்டை ஸ்கேல் மற்றும் கட்டையால் மாணவிகளை கைகளில் அடித்துள்ளார்.
இதில், மாணவிகளின் கைகளில் வீங்கிய நிலையில் ரத்தம் கட்டி உள்ளது. இதனால் மாணவிகள் அழுது கொண்டு மாலையில் வீட்டிற்குச் சென்றுள்ளனர். உடனே விசாரித்த பெற்றோர்கள், மாணவிகளை வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், இதுகுறித்து தகவல் விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் ஆசிரியை மீது புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:வீட்டுப்பாடம் சரியாக செய்யாததால் ஆசிரியை கட்டையால் அடித்ததில் மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!