பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான கடைகளில் குடியிருக்கும் வாடகை தாரர்களான சுரேஷ்பாபு, லட்சுமணன் உள்ளிட்ட 61 பேர் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது
அம்மனுவில், "பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான கடைகளில் பல ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வருகிறோம். இந்த கடைகளில் வாடகை உயர்த்துப்பட்டுள்ளது. இதனால் புதிய ஏலம் விடும் அறிவிப்பு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மேல்முறையீட்டு அமைப்புகள் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதற்கிடையே ஜூன் 1ஆம் தேதி பழனி கோயில் நிர்வாகத்தினர் ஒரு வாரத்தில் கடைகளை காலி செய்யுமாறு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து கடைகளை ஏலம் விடுவதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் கோயில் நிர்வாகம் வாடகையை உயர்த்துவது போன்று சேதங்களுக்கான பராமரிப்புத் தொகை என பலமுறை கட்டணங்களை உயர்த்தி உள்ளது. எனவே எவ்வித முன்னறிவிப்புமின்றி நோட்டீஸ் வழங்காமல் கடைகளுக்கு ஏலம்விட ஆயத்தமாகி வருகின்றனர். ஆகவே கடைகளை ஏலம் விட தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், பழனி கோயிலுக்கு சொந்தமான 61 கடைகளை ஏலம் விடுவதற்கு இடைக்கால தடை விதித்து, இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.