அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடாக திகழும் பழனி முருகன் கோயிலின் பிரசாதமாக பஞ்சாமிர்தம் உள்ளது. மிகவும் புராதன பிரசாதமாக விளங்கும் இந்த பஞ்சாமிர்தம் முருக பக்தர்களிடம் மட்டுமின்றி உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகிறது.
உலகப்புகழ் பெற்ற பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு (Geographical Index) வழங்கவேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்துவந்த நிலையில், தற்போது பழனி கோயில் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் பட்டுச் சேலை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருப்பதி லட்டு, மதுரை மல்லிகைப் பூ, மதுரை சுங்குடி சேலை, சேலம் மாம்பழம், தஞ்சாவூர் பாணி ஓவியங்கள், பத்தமடை பாய் ஆகியவை புவிசார் குறியீடு பெற்றுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வெள்ளைப்பூண்டிற்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு புவிசார் குறியீடு வழங்கப்பட்ட நிலையில், தற்போது பழனி பஞ்சாமிர்தத்திற்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.