புரட்டாசி மாதத்தில் இருக்கும் விரதங்களில் ஒன்று நவராத்திரி விரதம். மொத்தம் 9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரியின் முதல் 3 நாட்கள் துர்கைக்கும், அடுத்த 3 நாட்கள் லட்சுமிக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் என கொண்டாடப்படுகிறது. நவராத்திரியை முன்னிட்டு லட்சுமி, சரஸ்வதி, துர்கை போன்ற ஏராளமான பொம்மைகளைக் கொண்டு அழகிய கொலுக்கள் வீடுகளில் வைக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் வரும் 16ஆம் தேதி முதல் நடப்பாண்டு நவராத்திரி பண்டிகை தொடங்கவுள்ளதால், திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நவராத்திரி கொலுவில் பயன்படுத்தும் வண்ண பொம்மைகளின் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தமுறை கடலூர், திருச்சி, காஞ்சிபுரம், மதுரை போன்ற ஊர்களிலிருந்து திண்டுக்கல்லுக்கு நவராத்திரி பொம்மைகள் விற்பனைக்கு வாங்கி வரப்பட்டுள்ளது.
குறிப்பாகக் காகிதம், மரக்கூழால் செய்யப்பட்டு செயற்கை வண்ணம் சேர்க்காமல் செய்யப்படும் விநாயகர், அம்மன், சிவன், ராமர், கிருஷ்ணன், அஷ்ட லெட்சுமி, குபேரன் செட், அத்தி வரதர், தசாவதாரம், அன்னபூரணி, கார்த்திகை பெண்கள், வளைகாப்பு செட், கரகாட்டம், திருவிளையாடல் விளக்குப் பூஜை, போன்ற பொம்மைகள் கண்கவர் வண்ணங்களில் இடம்பெற்றுள்ளன. மக்களின் தேவைக்கேற்ப ரூ.100 முதல் ரூ.2 ஆயிரம் வரை பொம்மைகள் விற்கப்படுகின்றன. மக்கள் நவராத்திரியைக் கொண்டாட ஆர்வத்துடன் கொலு பொம்மைகளை வாங்கிச் செல்கின்றனர்.
இதையும் படிங்க: சடன் பிரேக் போட்ட ஓட்டுநர்… வடிவேல் போல் பறந்த நடத்துநர்!