திண்டுக்கல்: நத்தம் மாரியம்மன் கோயில் தென்தமிழ்நாட்டில் பிரசித்திபெற்றது. இக்கோயிலில் மாசிப்பெருந்திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து மறுநாள் 10ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து வந்து காப்புக்கட்டி தங்களது 15 நாள் விரதத்தைத் தொடங்கினர்.
இதில் காப்பு கட்டுவதற்கு ரூ.20 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில் மாரியம்மன் கோயில் எழுத்தர் முனியாண்டி காப்புகட்டும் ரசீதை ஜெராக்ஸ் எடுத்து வழங்கி, முறைகேட்டில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அதன் பெயரில் திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குநர் பாரதி உத்தரவின் பெயரில், நத்தம் மாரியம்மன் கோயில் மற்றும் அலுவலகத்தில் உதவி ஆணையர் சுரேஷ் விசாரணை நடத்தினார்.
அந்த விசாரணையின் போது, குற்றச்சாட்டுக்கு ஆளான எழுத்தர் முனியாண்டி தனது மொபைலை சுவிட்ச் ஆப் செய்து விட்டு பணிக்கு வராமல், விசாரணைக்கும் ஆஜராகாமல் இருந்துள்ளார். எனவே, திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி கமிஷனருக்கு எழுத்தர் முனியாண்டியை இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்துள்ளார்.
மேலும் விசாரணைக்குப் பின்பு தவறு நடந்திருப்பது உறுதியானால், எழுத்தர் முனியாண்டி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். நத்தம் மாரியம்மன் கோயில் மாசி திருவிழா நடைபெற்று வரும் சூழ்நிலையில் எழுத்தர் முறைகேட்டில் ஈடுபட்டதாகப் புகார் வந்துள்ளது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முனியாண்டி கடந்த 10 ஆண்டுகளாக நத்தம் மாரியம்மன் கோயிலில் எழுத்தராகப் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.