திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் திண்டுக்கல் தனியார் திருமணம் மண்டபத்தில் நேற்று (பிப். 12) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.
அவர் பேசுகையில், “பாஜக 20 ஆண்டுகளுக்குப் பிறகு தனியாகத் தமிழ்நாட்டில் போட்டியிடுகிறது. திண்டுக்கல்லில் பாஜக வளர்ச்சி அபரிவிதமாக உள்ளது. திமுகவின் எட்டு மாத ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு எந்த நலனும் செய்யாமல் மத்திய அரசை எதிர்த்து அரசியல் செய்துகொண்டு வருகின்றனர்.
எந்த ஒரு செயலையும் முழுமையாகச் செய்து முடிக்கத் திறமை இல்லாதவர்கள் பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கியதில் உலகமகா ஊழல் செய்திருக்கிறார்கள். மஞ்சள் பை, கரும்பு ஆகிய இரண்டில் மட்டும் 160 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வாக்கு கேட்கிறார். அவருக்குத் தெரியும் வெளியில் வந்து மக்களைச் சந்தித்து வாக்குக் கேட்டால், கேள்வி கேட்பார்கள், அதற்குப் பதில் சொல்ல முடியாது. மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவிவருகிறது. சாக்கடைகள் எங்கும் தூர்வாரப்படவில்லை. பார்க்கிங் வசதிகள் இல்லை, சாலைகளை அவ்வப்போது தோண்டி போட்டு விடுகின்றனர்.
சாதனைகளைக் கூறி வாக்குக் கேட்க வேண்டும்!
30 விழுக்காடு கமிஷன் இல்லாமல் தமிழ்நாட்டில் எந்த வேலையும் தற்போது நடைபெறுவதில்லை. உள்ளாட்சி பொறுப்புகளில் நேர்மையான உறுப்பினர்கள் பதவியில் இல்லாவிட்டால், இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நகர் பகுதிகளில் யாரும் வாழ முடியாது. தற்போது, ஊராட்சித் தேர்தலில் பாஜகவிற்க்கு மிக முக்கியமான தேர்தலாக உள்ளது.
எனவே, தேர்தலில் போட்டியிடுபவர்கள் மத்திய பாஜக அரசின் சாதனைத் திட்டங்களை எடுத்துச் சொல்லி ஓட்டு கேட்க வேண்டும். தமிழ்நாடு அரசியலில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
ஸ்டாலின் கனவில் மோடி வருகிறார்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கனவில் தினமும் பிரதமர் மோடிதான் வருகிறார். தினமும் ஏதாவது ஒன்றைச் சொல்லிப் பிதற்றிக் கொண்டே இருக்கிறார். இந்த மனநோய்க்கு மருந்து பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெறுவது மட்டும் தான்.
பணம் கொடுத்தால் மக்கள் ஓட்டுப் போட்டு விடுவார்கள், நாம் ஜெயித்து விடலாம் என்ற பல கட்சிகள் நினைத்துச் செயல்பட்டு வருகிறது. பரப்புரைக்கான இறுதிநாள் நெருங்கி வருவதால், பாஜக வேட்பாளர்கள் துரிதமாக களப்பணி ஆற்ற வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:துரோகத்தை மறந்து வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்க வேண்டும் - டி.ஆர்.பாலு அறிவுரை