திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நடத்தும் கல்லூரிகளுக்கான சாம்பியன்ஷிப் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இதில் மொத்தம் எட்டு அணிகள் கலந்துகொண்டன. லீக் முறையில் நடைபெற்ற இந்த போட்டியின் இறுதிச் சுற்றுக்கு மதுரை சரஸ்வதி நாடார் கல்லூரியும், திண்டுக்கல் ஜிடிஎன் கலை கல்லூரியும் தகுதிபெற்றன.
பின்னர் நடைபெற்ற இறுதி போட்டியில் இரண்டு அணிகளும் சிறப்பாக செயல்பட்டதால் இப்போட்டி கோல் ஏதுமின்றி டிராவில் முடிவடைந்தது. இதனால் லீக் சுற்றில் ஆறு புள்ளிகள் பெற்ற சரஸ்வதி நாடார் கலைக்கல்லூரி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு சாம்பியன் கோப்பை வழங்கப்பட்டது.
மேலும் நான்கு புள்ளிகள் எடுத்த திண்டுக்கல் ஜிடிஎன் கலைக் கல்லூரி அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. இப்போட்டிகளின் மூலம் காமராசர் பல்கலைக்கழக அணிக்கான சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அணியானது பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் கலந்துகொள்ளும்.