திண்டுக்கல்லில் பேருந்து நிலையம் எதிரே கடந்த 2019ஆம் ஆண்டு மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த உதயகுமார், அவரது மனைவி சத்யா ஆகியோர் வில்வதுளசி என்ற நிதி நிறுவனத்தை தொடங்கினார்.
இந்நிறுவனத்தில் ஐந்து வகையான சீட்டில் வாடிக்கையாளர்கள் ரூபாய் 17 லட்சம்வரை செலுத்தியுள்ளனர். இந்நிலையில் இரண்டரை மாதம் செயல்பட்ட நிதி நிறுவனத்தை திடீரென உதயகுமார் மூடிவிட்டு தலைமறைவானார்.
இந்நிலையில், இவரது நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த வின்சென்ட் அருள்சாமி திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் உதயகுமார், அவரது மனைவி சத்யா மீது புகார் அளித்தார். இந்த புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா உத்தரவிட்டார்.
அதன்படி குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சத்யா வழக்குப்பதிவு செய்தார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வெங்கட்பிரபு மேற்கொண்ட விசாரணையில் உதயகுமார் பாண்டிச்சேரியில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்தது.
உடனடியாக பாண்டிச்சேரிக்கு சென்ற காவல் துறையினர் தலைமறைவாக இருந்த உதயகுமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் தமிழ்நாடு முழுவதும் சுய உதவிக் குழு, நிதி நிறுவனங்கள் நடத்தி மோசடி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து மோசடியில் தொடர்புடைய அவரது மனைவி சத்யாவை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.