திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்த கண்ணன்(29) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த பவானி என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.
கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பவானி கோபித்துக்கொண்டு, அதே பகுதியில் உள்ள தனது சகோதரர் வீரபாண்டி வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதையடுத்து, வீரபாண்டி தனது மைத்துனரான கண்ணனிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்த கடந்த 06.06.20 அன்று மருதாணி குளம் முருகன் கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கு வீரபாண்டிக்கும், கண்ணனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, கண்ணனின் தந்தை துரைசிங்கமும் (63), கண்ணனும் சேர்ந்து வீரபாண்டியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.
இதுதொடர்பாக திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, தந்தை துரைசிங்கம் மற்றும் மகன் கண்ணனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜமுனா, தந்தை-மகன் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து குற்றவாளிகள் இரண்டு பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: 'பெற்றோர் தங்களது ஆசையை குழந்தைகள் மீது திணிக்க கூடாது' - அமைச்சர் அன்பில் மகேஷ்