கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவினால் அனைத்துத் தரப்பு மக்களும் வேலையின்றித் தவித்து வருகின்றனர். அன்றாடத் தேவைகளுக்குக்கூட பணமின்றி மக்கள் அரசை எதிர்பார்த்துவருகின்றனர்.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவினால் வேலையின்றி தவித்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் கொடைக்கானலைச் சுற்றியுள்ள காடுகளை நோக்கி தஞ்சமடைகின்றனர். கொடைக்கானலில் சுமார் 76 பழங்குடியினர் கிராமங்களில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்துவருகின்றனர்.
இவர்கள் மலைப்பகுதியில் கிடைக்கும் கடுக்காய், நெல்லிக்காய், இஞ்சி உள்ளிட்ட வனப்பொருள்களை சேகரித்து, வெளியூரில் உள்ள வியாபாரிகளுக்கு விற்பனை செய்துவந்தனர். ஊரடங்கு உத்தரவின் காரணமாக பொருள்களை விற்பனை செய்யமுடியாததால், அத்தியாவசிய தேவைகளுக்கும் பணமின்றி தவித்துவந்தனர்.
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை, நிவாரணப் பொருள்களையும் ஆதார், குடும்ப அட்டை இல்லாத காரணத்தால் பெற இயலவில்லை. இதனால், பல தொண்டு நிறுவனங்கள் இவர்களுக்கு அவ்வப்போது நிவாரணப் பொருள்களை வழங்கிவந்தனர்.
இருந்தபோதிலும், தங்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்த அவர்கள், வேலையின்றி தவித்துவருவதால் உணவுப் பொருள்களுக்காக கிராமப் பகுதிகளில் வசித்துவந்த தாங்கள், மீண்டும் மலைப்பகுதிகளுக்கே உணவுத் தேடிச்செல்வதாக வேதனையுடன் தெரிவித்தனர்.
இதையும் பார்க்க: நாதஸ்வர கலைஞர்களின் கோரிக்கை!