திண்டுக்கல்: சுற்றுலாப் பயணிகளிடம் திருநங்கைகள் மிரட்டி வாங்கிய பணத்தை, இளைஞர் குழுவினர் திரும்பப்பெற்று உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வார விடுமுறை, தொடர் விடுமுறை காலத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகைதருவர். தற்போது கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு திருநங்கைகள் நான்கு முதல் ஆறு பேர் சேர்ந்து சுற்றுலாப் பயணிகளிடம் வழிப்பறி செய்வது போன்று மிரட்டி, அவர்களிடமிருந்து பணம், பொருள்களைப் பிடுங்கிச் செல்கின்றனர்.
இப்படி பல ஆயிரம் ரூபாய்களை சுற்றுலாப் பயணிகளிடம் பறித்த திருநங்கைகளை, ஒருகட்டத்தில் வெளிமாநில சுற்றுலாப் பயணிகளிடம் அவதூறாக நடந்துகொண்டனர்.
இச்சூழலில் பைன் மரக்காடுகளில் திருநங்கைகள் உள்ளே புகுந்து அங்குள்ள சுற்றுலாப் பயணிகளிடம் பணம் பறிக்க முயன்றனர். அப்போது சென்னையைச் சேர்ந்த இளைஞரிடம் திருநங்கைகள் பணத்தைப் பறிக்க முயன்றபோது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக முடிந்தது.
இருதரப்பினரும் மோதிக் கொண்டதில் சுற்றுலாப் பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். மேலும், இளைஞர்கள் சேர்ந்து சுற்றுலாப் பயணிகளிடம் சேர்ந்து பறித்த பணத்தை திரும்பப் பெற்று கொடுத்தனர். சம்பவம் குறித்து அறிந்த காவல் துறையினர், பிரச்னை நடந்த இடத்திற்கு வருவதற்குள் திருநங்கைகள் அந்த இடத்தைவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
திருநங்கைகள் கொடைக்கானலுக்கு கும்பலாக வாகனங்களை வாடகைக்கு பிடித்து கொண்டுவந்து, ஒவ்வொரு குழுவாகப் பிரிந்து சுற்றுலா இடங்கள், வியாபாரத் தலங்களில் மிரட்டி பணம் பறித்துவருவது தற்போது வாடிக்கையாகிவருகிறது என்று வியாபாரிகளும், சுற்றுலாப் பயணிகளும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.