திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் அதிகம் ரசிக்கும் இடமாக நட்சத்திர ஏரி உள்ளது. இந்த ஏரியைச் சுற்றியுள்ள நடைபாதைகள், மின் விளக்குகள் உள்ளிட்டவை பலவும் சேதம் அடைந்துள்ளன.
இந்நிலையில், கொடைக்கானல் நகராட்சி, சுங்க நிதியின் கீழ் இரண்டு கோடியே 28 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு ஏரியைச் சுற்றி உள்ள சேதமடைந்த நடைபாதைகளை சீரமைக்கும் பணியும், அலங்கார மின் விளக்குகள் அமைக்கும் பணியும், ஏரியை சுற்றி நவீன குப்பைத் தொட்டிகள் அமைக்கும் பணியும் முன்னதாக தொடங்கப்பட்டது.
ஆனால், இந்தப் பணிகள் தொடங்கப்பட்டு ஐந்து மாதங்கள் ஆகியும் இதுவரை முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளன. ஏரியை சுற்றியுள்ள நடைபாதையில் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் நடைப்பயிற்சி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் இந்தப் பணிகள் முடிக்கப்படாமல் இருப்பதால் நடைபயிற்சி செல்பவர்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.
அதேபோல நடைபாதைகளை சீரமைப்பதற்குத் தேவையான உபகரணங்களும் மூலப்பொருள்களும் சாலையிலேயே கொட்டப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.
இந்த நடைபாதைகள் மேம்பாட்டுப் பணிகளால் கொடைக்கானல் ஏரிக்கு செல்லவேண்டிய மழைநீர் சாலையிலேயே தேங்கியுள்ளது. எனவே கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் இந்த மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்து விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களும் சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.