திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நகர் பகுதி மட்டுமின்றி கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விதிமுறை மீறிய கட்டடங்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்பேரில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சீல்வைக்கப்பட்டது.
கட்டடங்களை வரன்முறைப்படுத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் நகராட்சி அனுமதி பெற்று நேற்று கட்டடத்தின் உரிமையாளர்கள் கட்டத்தை திறந்தனர். அப்போது, கட்டடத்தின் அறைகளில் வைக்கப்பட்டிருந்த விலையுர்ந்த 14 டிவிக்கள், நாற்காலிகள், சோபா உள்ளிட்டவை திருடுபோய் இருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கட்டட உரிமையாளர்கள், இதுதொடர்பாக கொடைக்கானல் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர். சீல்வைக்கப்பட்ட கட்டடத்தின் உள்ளே இருந்த விலை உயர்ந்த பொருள்களை திருடியதுடன் உள்ளே உட்கார்ந்து மது அருந்தி சென்றதும் தெரியவந்துள்ளது.