திண்டுக்கல்: தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாம் அலையின் காரணமாக அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து கரோனா தொற்று பாதிப்பு குறைந்துவரும் நிலையில், பல்வேறு தளர்வுகள் அறிவித்தும், இ-பதிவு முறைகளை நீக்கம் செய்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளை நம்பியே இருந்த கொடைக்கானலில் முதற்கட்டமாக கரோனா விதிமுறைகளைப் பின்பற்றியும் அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டும் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான பூங்காக்களைத் திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா உள்ளிட்டவற்றை, நாளை முதல் சுற்றுலாப்பயணிகள் கண்டு கழிக்க அனுமதிக்கப்படும் எனத் தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சீனிவாசன் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் சுற்றுலா வணிகத்தை நம்பியிருக்கும் கொடைக்கானல் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.