திண்டுக்கல்: இரண்டு காட்டெருமைகள் சண்டையிடும் காட்சி அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அண்மை காலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இச்சூழலில் வன விலங்குளான காட்டெருமை, பன்றி, சிறுத்தை, மான், யானை உள்ளிட்ட விலங்குகள் அதிகமாக குடியிருப்புக்குள் வலம் வர தொடங்கியுள்ளது.
வன விலங்குகளின் நடமாட்டத்தால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் அப்பகுதி வழியே சென்று வர முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில நேரங்களில் வன விலங்குகளால் உயிர் சேதமும் ஏற்பட்டு வருகிறது.
இச்சூழலில் பொதுமக்கள் அதிகம் வசிக்கக்கூடிய இடமாகவும், சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடமாகவும் உள்ள செட்டியார் பூங்கா பகுதியில் நேற்று இரண்டு காட்டெருமைகள் சாலையின் அருகே சண்டையிட்டு கொண்டுள்ளது. இதனால் அப்பகுதி வழியே பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சென்று வர முடியாமல் சிரமமடைந்தனர்.
காட்டெருமைகள் சண்டையிடும் காட்சி சமூக வலைதலங்களில் வேகமாக பரவி கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், வன விலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டுமென கோரிக்கையும் எழுந்துள்ளது.