திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பிரபலமான சுற்றுலா தலமாகும். ஆண்டுதோறும் வெளி மாநிலம், வெளி மாவட்டம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து பல லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம். குறிப்பாக கொடைக்கானலுக்கு பல ஆண்டுகளாகவே நவம்பர் மாத இறுதியில் இருந்து, இஸ்ரேல் நாட்டில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவதுண்டு.
அப்படி வருபவர்கள் வட்டக்காணல் பகுதிக்கு வந்து மூன்று மாதங்களுக்கு தங்கி செல்வது வழக்கம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக வெளிநாட்டு பயணிகள் வராமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு இஸ்ரேல் நாட்டில் இருந்து சுற்றுலா பயணிகள் வட்டக்கானலுக்கு வந்துள்ளனர்.
வட்டக்கானலில் வாரம் ஒரு முறை இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இறை வழிபாடு செய்வர். இந்த வழிபாட்டிற்கு இஸ்ரேல் நாட்டின் மத போதகர் தலைமை தாங்குவார். இந்நிகழ்ச்சி கபாத்(chabath) என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் சிக்கிய ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர் வட்டக்கானலில் தங்கி இஸ்ரேலில் இருந்து வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் மற்றும் மத போதகர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு தகவல் தெரிவித்து இருந்தது.
இதன் காரணமாக வட்டக்கானலுக்கு செல்லக்கூடிய பகுதிகளில் சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டு, வட்டக்கானல் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தற்போது கரோனா பரவல் மற்றும் அது குறித்த தகவல்களும் தங்களை மீண்டும் அச்சமடைய செய்துள்ளதாகவும், கரோனா பரவல் தீவிரம் அடையும் பட்சத்தில் தங்கள் நாட்டிற்கு செல்ல இந்திய அரசு உதவ வேண்டும் என்றும், இஸ்ரேல் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஊருக்குள் புகுந்து பொதுமக்களை தாக்கி அட்டூழியம் செய்யும் சிறுத்தை