திண்டுக்கல்: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால் கரோனா குறித்த போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொடைக்கானலில் சீசன் துவங்க உள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகை அதிகரித்துள்ளது.
அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. முக்கிய சுற்றுலா இடங்களான மோயர் பாயிண்ட், குணா குகை, பைன் மரக்காடுகள், பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயணிகள் முகக் கவசம், சமூக இடைவெளி போன்றவற்றை முறையாக பின்பற்றுவதில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கையும் எழுந்துள்ளது.