பழனி அருகே சின்ன கலையமுத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கோபாலபுரம் உள்ளது. இந்தப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். தற்போது, கரோனா அதிகமாக பரவிவரும் நிலையில் கரோனா தொற்று இல்லாத கிராமமாக முன்மாதிரியாக மாற்ற கோபாலபுரம் கிராமத்தை பழனி அரசு சித்த மருத்துவர் மகேந்திரன் தத்தெடுத்துக் கொண்டுள்ளதாக தெரிவித்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ’’அப்பகுதியில் வசிப்பவர்களை ஒன்று திரட்டி ஆரோக்கிய நகர் அமைப்போம். அடியோடு கரோனாவை விரட்டுவோம். இந்த நகரில் தூய்மைப்படுத்துவதற்காக பழனி ஆண்டவர் மகளிர் கலைக்கல்லூரி என்சிசி கல்லூரி மாணவிகள் உதவியோடும் தூய்மைப்படுத்தப்படும்.
வீடுகள்தோறும் மூலிகை மரங்களை வளர்ப்பதற்கு அப்பகுதி மக்களை ஊக்கப்படுத்தி அதன் நன்மைகளை அறிய வைத்து ஊக்கப்படுத்தப்படும். அதற்கான மூலிகை செடிகள் வீடுதோறும் வழங்கப்படவுள்ளன. 15 தினங்களுக்கு ஒரு முறை வீடுகள்தோறும் சென்று தூய்மைப் பணிகள் மேற்கொள்வதை கண்டறிந்து அதில் சிறந்த வீடுகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். அடுத்தடுத்து பொதுமக்கள் உதவிகளோடு தொடர்ந்து பல கிராமங்களை தத்தெடுக்க உள்ளோம்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், பழனி டிஎஸ்பி சிவா பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறது பாஜக' - திருமாவளவன் தாக்கு