திண்டுக்கல்: கொடைரோடு அருகே பள்ளபட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர், பால் வியாபாரி மகாபிரபு (25). இவரும் மதுரை பாண்டி கோயில் அருகேயுள்ள கல்மேடு அம்பேத்கர் நகரைச் சேர்ந்த அகிலாண்டேஸ்வரி (22) என்பவரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.
மகாபிரபு சரியாக வேலைக்குச் செல்லாமல் போதிய வருமானம் இல்லாததால், கணவனுக்கும் - மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
மகாபிரபுக்கு கூடுதலாக குடிப்பழக்கமும் அதிகம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜூன் 24ஆம் தேதியன்று மகாபிரபு குடித்துவிட்டு, தன் காதல் மனைவி அணிந்திருந்த தங்கத் தாலியை கேட்டுள்ளார்.
அதனை அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர் தனது தாய் ராமுத்தாய் (45), தம்பி அரவிந்த் குமார் (19) ஆகியோருடன் சேர்ந்து வீட்டின் கதவை அடைத்துக்கொண்டு அகிலாண்டேஸ்வரியை அடித்து, உதைத்து அவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து எரித்தார்.
பெண்ணின் வாக்குமூலம்:
இதனால், அகிலாண்டேஸ்வரி போட்ட கூச்சல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் வந்து தீயை அனைத்து அவரை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராசாசி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அம்மையநாயக்கனூர் காவல் துறையினர், விசாரணை செய்வதற்காக நேற்று (ஜூன் 25) மருத்துவமனைக்குச் சென்றனர்.
பின்னர், அகிலாண்டேஸ்வரியிடம் நடத்திய விசாரணையில், தன்னைத் தன் கணவன், மாமியார், கொழுந்தன் ஆகிய மூவரும் சேர்ந்து மண்ணெண்ணெயை ஊற்றி எரித்துக் கொலை செய்ய முயன்றதாகப் புகார் செய்தார்.
இது குறித்து உடனடியாக மருத்துவமனைக்குச் சென்ற ஆய்வாளர் சண்முகலட்சுமி அகிலாண்டேஸ்வரியிடம் வாக்குமூலம் பெற்றார்.
மூவர் கைது:
பின்னர், வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அகிலாண்டேஸ்வரியின் கணவர் மகாபிரபு, மாமியார் ராமுத்தாய், கொழுந்தன் அரவிந்த் குமார் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் மகாபிரபு , அவரது தம்பி அரவிந்த் குமார் மீது நிலக்கோட்டை, விளாம்பட்டி, பழனி, திண்டுக்கல் உள்ளிட்டப் பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கூட விளாம்பட்டியில் இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான முத்தாலம்மன் கோயில் உண்டியலில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் அண்ணன், தம்பி இருவரும் கைதாகி விடுதலையாகியிருந்தனர்.
இதையும் படிங்க:பெண்ணை கொலை செய்து கரோனா மீது பழியை போட்ட எஸ்.ஐ