திண்டுக்கல்: கொடைக்கானலில் பகல் நேரங்களில் வெயிலும், மாலை வேளையில் கடும் குளிரும் நிலவி வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் இறுதி வாரத்தில் தொடங்கிய உறை பனி தற்போது வரை நீடித்து வருகிறது. இந்த உறைபனியானது நட்சத்திர ஏரி பகுதி, ஜிம்கானா, பாம்பார்புரம், அப்சர்வேட்டரி எனப் பல்வேறு பகுதிகளில் நிலவி வருகிறது.
இதன் காரணமாக புற்களில் பனி படர்ந்து காணப்படுகிறது. இதனால் கொடைக்கானல்வாசிகள் அதிகாலை நேரங்களில் வீடுகள் மற்றும் சாலை ஓரங்களில் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். கொடைக்கானல் ஏரி சாலைப் பகுதியில் கொடைக்கானல்வாசிகள் மட்டுமின்றி உள்ளூர் வாசிகள், சுற்றுலா பயணிகள் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
தற்போது கொடைக்கானலில் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைந்துள்ளதால், இதய நோயாளிகள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டாம் எனவும்; வெயில் வந்த பிறகு நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் பனியின் தாக்கத்தின் காரணமாக தோல் மற்றும் வாயு பிரச்னை வருவதால் குளிர்ந்த நீரை பயன்படுத்த வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.