இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் வைரஸ் தாக்குதலைத் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
அதன்படி தமிழ்நாடு அரசு பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள், திரையரங்குகள் போன்ற இடங்களை வரும் 31ஆம் தேதிவரை மூட உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தேவையின்றி அதிகம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்திவருகிறது.
சுகாதாரத் துறை சார்பில் கை கழுவுவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. இந்த விழிப்புணர்வு பரப்புரைகளை அரசு மட்டுமின்றி தனியார் தொண்டு நிறுவனங்களும் முன்னெடுத்துவருகின்றன.
அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் நத்தம் சாலையில் அமைந்துள்ள பொன்னகரம் பகுதி அருகே உதயம் அரிமா சங்கம் சார்பாக கரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் 60 ஆயிரம் ரூபாய் செலவில் 10 இடங்களில் கை கழுவும் தொட்டி நிறுவப்பட்டு அதைத் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பொன்னகரம், குள்ளனம்பட்டி, நல்லாம்பட்டி, ராஜலெட்சமி நகர் உள்ளிட்ட 10 இடங்களில் இந்தக் கை கழுவும் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் மீனா தேவி, திண்டுக்கல் தாலுகா காவல் ஆய்வாளர் தெய்வம், அடியனூத்து ஊராட்சித் தலைவர் ஜீவானந்தம், ஆகியோர் கலந்துகொண்டு, கை கழுவும் முறை குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளித்தனர்.
மக்கள் அதிகம் கூடுகின்ற நகர்ப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கை கழுவும் தொட்டிகளினால் மக்களிடையே கை கழுவும் பழக்கம் வழக்கமாகும் என நம்பப்படுகிறது.