திண்டுக்கல்: இந்துக்களின் முக்கியப்பண்டிகைகளுள் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதற்காகப் பல வகையான சிலைகள் தயாரிக்கப்படும்.
விநாயகர் சதுர்த்தி விழாவை கோலாகலமாக கொண்டாடப் பல்வேறு இந்து அமைப்புகள் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வர். பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தினமும் பூஜை நடத்தப்படும். அதன்பிறகு சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படும்.
விதவிதமான சிலைகள்: கடந்த இரண்டு ஆண்டுகளாக, கரோனா பரவல் காரணமாக, விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு கரோனா தொற்று நெறிமுறை தளர்த்தப்பட்டு, ஆகஸ்ட் 31அன்று விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நொச்சி ஓடைப்பட்டியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. களிமண், காகிதக் கூழ், கிழங்கு மாவு ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் வர்ணம் பூசி தயார்படுத்தி வருகின்றனர். கருட வாகனம், நந்தி வாகனம், அன்ன வாகனம், மயில்வாகனம், சிம்ம வாகனம், ராஜ சிம்மாசனம் ஆகியவற்றில் விநாயகர் அமர்ந்த நிலையிலும் நின்ற நிலையிலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
சிலை தயாரிப்பில் தீவிரம்: அரையடி முதல் 10 அடி வரை விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் தயார் செய்யப்பட்ட சிலைகள் ரூ.100 முதல் ரூ. 15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும், இங்கு தயாரிக்கப்படும் சிலைகள், திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், திருப்பூர், சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
இரண்டு ஆண்டுகள் கழித்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளதால், சிலைகள் நன்கு விற்பனையாவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். விதவிதமான வடிவங்களில் சிலைகள் வடிவமைக்கப்படுவதால், மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் சிலைகளை வாங்கிச்செல்கின்றனர். விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் சில நாள்கள் மட்டும் இருப்பதால், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நொச்சி ஓடைப்பட்டி பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது.
மகிழ்ச்சியில் வியாபாரிகள்: இதுகுறித்து சிலை தயாரிப்பாளர் கஜேந்திரன் கூறுகையில், “திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ரோட்டில் நொச்சி ஓடைப்பட்டியில், டெரகோட்டா கைவினைக் கலைக்கூடம் இயங்கி வருகிறது. இங்கு டெரகோட்டா எனப்படும் சுடுமண் சிலைகள் அதிகம் செய்யப்படும்.
ஆண்கள், பெண்கள் என சுமார் 30 நபர்கள், இக்கலைக்கூடத்தில் பணியாற்றி வருகிறார்கள். விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் சில நாள்கள் மட்டுமே உள்ளதால் அனைவரும் இரவு பகல் என பாராமல் உழைத்து வருகிறோம்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அரையடி முதல் 10 அடி வரை விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தயாரிக்கப்படும் சிலைகள், திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், திருப்பூர், சிவகங்கை,தேனி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
கருட வாகனம், நந்தி வாகனம், அன்ன வாகனம், மயில்வாகனம், சிம்ம வாகனம், ராஜ சிம்மாசனம் ஆகியவற்றில் விநாயகர் அமர்ந்திருப்பது போன்ற விதவிதமான வடிவத்தில் விநாயகர் சிலைகள் செய்துவருவதால், பொதுமக்கள் விரும்பி வாங்கிச்செல்கின்றனர். இந்த ஆண்டு, அதிக சிலை விற்பனையாகி வருவதால், மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.
இதையும் படிங்க: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா தேரோட்டம்