கொடைக்கானலை சேர்ந்த ஜீவா, வீடுகள் விற்பனை மற்றும் ஒப்பந்த முறையில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதே ஊரைச் சேர்ந்த சஞ்சீவி அவரது மகன் இமானுவேல் ஆகிய இருவரும், ஜீவாவிடம் மாலத்தீவில் 200 கோடி ரூபாய் அளவில் ஒப்பந்த முறையில் கட்டுமானப் பணிகள் கட்ட வாய்ப்பு வந்துள்ளதாகவும், முதலீடு அதிகமாக போட்டால் மிக அதிக லாபம் பெறலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
மேலும், வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடம் 600 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாகவும், அதற்கு முன் பணமாக 40 லட்ச ரூபாயையும் அவரிடம் வாங்கியுள்ளனர். ஆனால், பணம் வாங்கிய பின்னர் இருவரும் எந்த ஒரு தகவலையும் சொல்லாததால், தன்னிடம் மோசடி நடந்ததை அறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஜீவா புகாரளித்தார். அதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் தந்தை, மகன் இருவரிடமும் விசாரணை நடத்தினர்.
அதில், சஞ்சீவி அவரது மகன் இமானுவேல் ஆகிய இருவரும் இணைந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்த திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: குடும்ப தகராறு: மகள்களை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை!