திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை, மணக்காட்டூர், பிள்ளையார்நத்தம், குடகிப்பட்டி கோசுகுறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.
இந்தாண்டு பருவமழை பெய்யாமல்போனதால் பயறு வகைகள், தானியங்கள் எதிர்பார்த்த அளவு மகசூல் கிடைக்காமல் போய்விட்டது. இருப்பினும் ஒரு சில பகுதிகளில் விளைச்சல் நன்றாக இருந்தாலும், அதற்கான விலை கிடைக்கவில்லை.
இதுகுறித்து கருத்தநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் கூறுகையில், "இந்த வருடம் எதிர்பார்த்த தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை மிகவும் குறைவாக பெய்துள்ளது. இதனால் விவசாயப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுவாக மானவாரியாகவும், இறவை சாகுபடி தோட்டங்களிலும் நிலக்கடலையை விவசாயிகள் பயிரிட்டு அறுவடை செய்து வருகின்றனர். இதில் ஒரு ஏக்கருக்கு சுமார் 10 மூட்டையிலிருந்து 15 மூட்டைவரை மகசூல் கிடைக்கிறது.
தற்போது நிலக்கடலை 1 கிலோ ரூ. 23-லிருந்து 30 ரூபாய்வரை விற்பனையாகிறது. இது விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: மண்ணின் தன்மை மாறியதால் வளராமல்போன நிலக்கடலை!