திண்டுக்கல்: ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகளை ஒட்டி, நேற்று முதல் நிலக்கோட்டை மலர்ச் சந்தைக்கு விவசாயிகள் விளைவிக்கப்பட்ட பூக்களை கொண்டு வந்து குவிக்கத் தொடங்கினர்.
பூ விவசாயிகள் மகிழ்ச்சி
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் பூக்களை வாங்க வந்திருந்ததால், பூக்களுக்கு நல்ல விலை கிடைத்தது.
மல்லிகைப்பூ ஒரு கிலோவிற்கு ரூபாய் 600 முதல் 700 வரையிலும்; முல்லைப்பூ ரூபாய் 550-க்கும்; கனகாம்பரம் ரூபாய் 500-க்கும் விற்பனை ஆகின.
ஆயுத பூஜை ஸ்பெஷலான கதம்ப மாலை கட்டப்பயன்படுத்தப்படும் துளசி, அரளிப்பூக்களுக்கு நல்ல விலை கிடைத்தது. அதிகப்பட்சமாக அரளிப்பூ ரூபாய் 450-க்கும்; செண்டுமல்லி ரூபாய் 150-க்கும் விற்பனையானது.
தளர்வுகளுடன் இந்தாண்டு பண்டிகைகள்
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடு காரணமாக, ஆயுதபூஜை சரிவர கொண்டாடப்படாத நிலையில், தற்போது அறிவித்துள்ள தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கில் மக்கள் சிறப்பாக பூஜைகளை கொண்டாடுவர் என்று நம்பலாம்.
இதன் ஒருபகுதியாக ஆயுதபூஜை விழாவையொட்டி, நிலக்கோட்டைப் பூ மார்க்கெட்டில் மதியம் 12 மணி நிலவரப்படி 200 டன் பூக்கள் விற்பனையாகி, ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதனால் பூ விவசாயிகளும் வியாபாரிகளும் பெரும்மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் பேஷன் பழங்களின் அறுவடை தொடக்கம்