திண்டுக்கல் மாவட்ட கிராமப்பகுதிகளில் கழிவு நீரோடை, சிறு பாலம், சிமெண்ட் சாலை போன்ற கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. இதில் வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு, ரூ.7.17 கோடி மதிப்பிலான 58 புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, குடிநீர் வழங்கும் பணிகளையும் தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், அதிமுகவில் முதலமைச்சர் யார் என்பதில் போட்டியே இல்லை என்றார். தமிழ்நாட்டில் அடுத்த ஆட்சியும் அதிமுக ஆட்சிதான் என்ற அவர், அடுத்த முதலமைச்சரும் எடப்பாடி பழனிசாமிதான் எனவும் தெரிவித்தார்.
இருந்தபோதும் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் சேர்ந்து வரும் 7ஆம் தேதி அறிவிப்பார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
அதிமுகவில் ஏற்கனவே முதலமைச்சர் வேட்பாளர் குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில், கட்சியினர் யாரும் இது குறித்து வெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், அதிமுகவின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான திண்டுக்கல் சீனிவாசன், மீண்டும் எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் என வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்து பேசியிருப்பது, ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சரை முடிவு செய்யும் அதிகாரத்தில் நாங்கள் இருப்போம் - பாஜக நாகராஜ்