ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பண்ணைபட்டி கோம்பை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளையப்பன் (70). மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இவருக்குச் சொந்தமான மாங்காய்த் தோப்பு ஒன்றில் குடிசை வீடு அமைத்து அதில் வசித்துவந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு இவரது குடும்பத்தினர் அனைவரும் வெளியில் சென்றுவிட்ட நிலையில் வெள்ளையப்பன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வெள்ளையப்பன் தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் கூட்டம் கூரையைப் பிரித்துக்கொண்டு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த வெள்ளையப்பனை மிதித்து கொன்றுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டன.
இன்று அதிகாலை அவ்வழியாக வந்தவர்கள் இதுகுறித்து காவல் துறையினருக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர், கன்னிவாடி வனச்சரகர், கன்னிவாடி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட அலுவலர்கள், வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று வெள்ளையப்பனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வு பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இப்பகுதியில் யானைகளால் அடிக்கடி மனித உயிர் இழப்புகளும், விவசாயப் பயிர்கள் சேதப்படுகிறது என்றும், இதுகுறித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்து, போராட்டங்களும் நடத்திவருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அதே பகுதியில் இரவு நேரத்தில் தோட்டத்தில் காவலுக்கு இருந்த முருகன் என்பவரை யானை மிதித்து கொன்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் காட்டுயானைகள் முகாம் - வனத்துறை எச்சரிக்கை