திண்டுக்கல்: கொடைக்கானல் வனத்துறையினருக்கு பெருமாள் மலையை அடுத்த பாலமலை பகுதியில் யானை தந்தங்கள் விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து வனத்துறையினர் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பாலமலை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் 9 பேர் கொண்ட கும்பல் தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.
மேலும் இவர்களிடம் விசாரணை நடத்தியதில் வத்தலகுண்டு பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த பிரபாகர் (40), கொடைக்கானல் பெருமாள் மலையைச் சேர்ந்த ஜோசப் சேவியர் (40), மதுரை தனக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் (40), பிரகாஷ் (24), கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அப்துல் ரஷீத் (47), கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சிபின் தாமஸ் (26), பழனி பாலாறு டேம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (56), காரைக்குடி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ராஜ்குமார் (29) ஆகிய 8 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் இருந்த யானை தந்தங்கள் இரண்டு, நாட்டு துப்பாக்கி ஒன்று, சொகுசு கார் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
வனத்துறையினர் யானை தந்தங்களை விற்க முயன்ற கும்பலை கைது செய்த போது, கொடைக்கானல் பெருமாள் மலைப் பகுதியைச் சேர்ந்த சார்லஸ் மட்டும் தப்பி ஓடி விட்டார். தப்பி ஓடிய சார்லஸை வனத்துறையினர் தேடி வருகின்றனர். இது பற்றி கொடைக்கானல் வனத்துறை ரேஞ்சர் சிவக்குமார், வனவர் அழகுராஜா ஆகியோர் யானை தந்தங்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, யாருக்கு விற்கப்படுகின்றது, இப்படி தந்தங்கள் விற்பது இது முதல் முறையா? என்பது பற்றி தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து கொடைக்கானல் மலைப் பகுதிக்கு வருவதற்கு நான்கு வனத்துறை சோதனைச் சாவடிகள் இருக்கின்றன. இந்த சோதனை சாவடிகளை தாண்டி எப்படி தந்தங்கள் கொடைக்கானலுக்கு கொண்டுவரப்பட்டது என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் பின்னணி என்ன?