திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகரிலுள்ள ஸ்வீட் மற்றும் காரம் தயாரிக்கும் கடையில் தரமற்ற உணவுப் பண்டங்களை தரம் குறைந்த எண்ணெய்களைக் கொண்டு தயாரிப்பதாகவும், மிச்சர் போன்ற கார வகைகளில் கூடுதலாக வண்ணப்பொடி கலந்து தயாரிப்பதாகவும் புகார் வந்தது. மேலும் இந்த பண்டங்கள் உண்பதற்கு ஏற்றதாக இல்லையெனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அதிகாரி நடராஜன் மற்றும் ஒட்டன்சத்திரம் உணவுப்பாதுகாப்பு அலுவலர் ஆகியோர், நகரிலுள்ள ஸ்வீட் மற்றும் காரம் விற்பனை செய்யும் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, பாதுகாப்பற்ற முறையில் ஊழியர்கள் கையுறைகள் அணியாமல் சுகாதாரமற்ற முறையில் பொருட்கள் தயாரித்தனர்.
மேலும், பண்டங்கள் தயாரிக்க அசுத்தமான எண்ணெய் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. அதே போன்று உணவுப் பண்டங்களை கவர்ச்சிகரமாக்க வண்ணப்பொடிகள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து உண்பதற்கு ஏற்றதாக இருக்கும் அந்த உணவுப்பண்டங்கள் அனைத்தையும் ஃபினாயில் ஊற்றி அழித்தனர். தொடர்ந்து எண்ணெய்களை கழிவுநீர் கால்வாயில் ஊற்றினர்.
பின்னர் தரமற்ற பண்டங்கள் தயாரிக்கும் கடை உரிமையாளர்களை கண்டித்ததுடன், இனி இது போன்று புகார் இருப்பின் கடைக்கு சீல் வைக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்து சென்றனர்.