திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வசித்துவரும் நாகராஜ் என்பவர் தச்சுத் தொழில் (மரவேலைகள்) செய்துவருகிறார். இவர் தன் தந்தையிடமிருந்து இவ்வேலையைக் கற்றுக்கொண்டார்.
தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு சுயமாக இத்தொழிலைச் செய்துவருகிறார். தனக்குத் தெரிந்த தச்சுத் தொழிலில் ஏதாவது புதுமையான சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் இவரது மனத்தில் பல ஆண்டுகளாக இருந்துள்ளது.
இதுவரை செய்த பொருள்கள்
இதன் வெளிப்பாடாக ஐந்து ஆண்டுக்கு முன்பு ஒரே மரத்தில் கலைநயத்துடன்கூடிய சாமி அறை முகப்பு, வீட்டு வாசல் முகப்பு, மரத்திலான மாலை, பெண்கள் அணியக்கூடிய தோடு, ஜிமிக்கி, கழுத்தில் அணியக்கூடிய சங்கிலி, பெண்கள் இடுப்பில் அணியக்கூடிய ஒட்டியாணம் போன்ற ஆபரணங்கள் ஆகியவற்றைச் செய்வது என முடிவுசெய்தார்.
இதற்காக யாரிடமும் சென்று பயிற்சி எடுக்காமல் தனக்குத் தெரிந்த தொழிலை வைத்து கடந்த ஐந்து ஆண்டுகளாக இவற்றைச் செய்துவருகிறார். இதனையடுத்து, இவர் ஒரே மரத்தினால் விநாயகர், லட்சுமி, முருகன், வெங்கடாசலபதி போன்ற சாமிகளின் உருவங்கள், பூரண கும்பம், சாமி படங்களுக்குத் தொங்கவிடக்கூடிய மாலை, அலங்காரத்திற்காகத் தொங்கவிடக்கூடிய சங்கிலி போன்றவை செய்துவருகிறார்.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால், எவ்விதமான பசையும் (Gum) கொண்டு ஒட்டாமல் மரத்துண்டுகளின் உதவிகொண்டே செய்துவருகிறார். தற்பொழுது ஏழு அடி உயரத்தில் அ முதல் ஃ வரை எழுத்து கொண்ட மாலை இவர் செய்துவருகிறார்.
செய்யும் முறை
இதுபோன்ற பொருள்களைச் செய்வதற்கு பர்மா தேக்கு, குமிழ் போன்ற மரங்களைப் பயன்படுத்துகின்றார். முன்னதாக தான் செய்யவுள்ள பொருள்களுக்கான டிசைன்களை உருவாக்கி, தனது கையால் தாளில் வரைந்து, அதனை அப்பொருள்கள் செய்யவுள்ள மரத்தில் ஒட்டி அந்த வடிவத்திற்கு ஏற்ப சின்ன சின்ன உளிகளைக் கொண்டு செதுக்கி வேலை செய்துவருகிறார்.
வேகமாகத் தட்டினாலே உடைந்துவிடும் அளவிற்கான நுட்பமான பொருள்களைக் கையாளுவதால் நிதானமாகவும், பொறுமையாகவும் இக்கலைப் பொருள்களை மெனக்கடலுடன் செய்துவருகிறார். இயந்திரத்திற்கு வேலை இல்லாத வகையில் முமுமையாக கை வேலைப்பாடுகளுடன் இப்பொருள்களைச் செய்துவருகிறார்.
மூன்று அடி அகலம் கொண்ட முகப்பு செய்வதற்கு குறைந்தது ஆறு மாத காலம் ஆகும். தற்பொழுது ஆம் முதல் ஃ வரை எழுத்து கொண்ட மாலையை கடந்த ஒன்றரை மாதமாகச் செய்துவருகிறார். மேலும், இப்பணி முடிவடைய 15 நாள்கள் ஆகும் எனத் தெரிவித்தார்.
முதலமைச்சருக்கு பரிசளிக்க ஆசை
தற்பொழுது தயார் செய்யப்பட்டு வரும் மாலையை தமிழ்நாடு முதலமைச்சருக்கு அளிக்க உள்ளதாக நாகராஜன் தெரிவித்தார். மேலும், பல வகையான விஷயங்களை செய்யவுள்ளதாகவும் தனது சாதனை பயணத்திற்கு முடிவு இல்லை எனவும் நாகராஜன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மஞ்சப்பை இயக்கம் இன்று தொடக்கம்