திண்டுக்கல்: சாதனையாளர்கள் எப்போதும் சரித்திரம் படைக்க நினைப்பார்கள். அந்த வகையில் திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் உள்ள ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சிப் பெற்ற ஸ்கேட்டிங் மாணவர்கள் உலகச் சாதனைக்காக கர்நாடகா மாநிலம் செல்கின்றனர்.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்காமில் 81 மணி நேர ஸ்கேட்டிங் உலக சாகச நிகழ்ச்சி நடக்கிறது. இதில் 18 மாணவர்களும், 3 மாணவிகளும் பங்கேற்கின்றனர். இவர்கள் உலக சாதனை நிகழ்த்த உள்ளதை பலரும் வாழ்த்தி வரவேற்றனர்.
சாதனைப் படைக்கச் செல்லும் மாணவர்கள்
சின்னாளபட்டியில் நடந்த விழாவில் இவர்கள் அனைவரையும் வெற்றிபெற மாஸ்டர் பிரேம்நாத், உலக ஸ்கேட்டிங் ரோல் பால் தமிழ்நாடு சாம்பியன் விஜய வர்ஷினி, கண்மணி, ரோல்பால் ஸ்கேட்டிங் கேப்டன் தீபக் ராஜ், கோச் சக்திவேல் உள்பட பலர் வாழ்த்தினர்.
சாகச நிகழ்ச்சிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளை பெற்றோரும் ஆரத்தழுவி தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
இது குறித்து மாணவ மாணவிகள் கூறியதாவது, “81 மணி நேரம் நாங்கள் சோர்வில்லாமல், தொய்வில்லாமல், ஓய்வில்லாமல், ஸ்கேட்டிங் செய்து சாதனைப் படைக்க உள்ளோம்.
இது உலகச் சாதனை என்று நினைக்கும்போது எங்களுக்குப் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. எங்களுக்கு இந்த அளவுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களையும், பெற்றோரையும் வணங்கி இந்தப் போட்டியில் பங்கேற்கிறோம்” என்றனர்.
இதையும் படிங்க: சிலம்பத்திற்கு அங்கீகாரம்; தமிழினத்திற்கு பெருமை - நிறைவேறிய முதலமைச்சரின் முயற்சி