திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவாளிப்பிரியா, கரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மாற்றுத் திறனாளிகள், ஏழை எளிய கிராமியக் கலைஞர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தினக்கூலி சுமைத்தொழிலாளர்கள் என 250 நபர்களுக்கு அமையநாயக்கனூர் காவல் துறையினர் சார்பில், ஐந்து கிலோ அரிசி, பருப்பு, சர்கரை, எண்ணெய், கோதுமை, காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து அவர், தற்போது கரோனா தடுப்பூசி குறித்தான தவறான தகவல்கள் பரவி வருகின்றன. கடந்த ஆண்டு எங்களது குடும்பத்தில் கரோனா தொற்று காரணமாக வயதான இருவர் இறந்து விட்டனர். கரோனா தடுப்பூசி நம் அணைவருக்கும் பாதுகாப்பானது. தடுப்பூசி குறித்தான வதந்திகளை மக்கள் யாரும் நம்பவேண்டாம்.
அரசு கடந்த ஓராண்டாக உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு கட்ட சோதனைகளை செய்து கோவிஷீல்ட், கோவாக்சின் போன்ற தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு இலவசமாக செலுத்தி வருகிறது. பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அச்சப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக தாய்மார்கள். நான் சில மாதங்களுக்கு முன்புதான் குழந்தை பெற்றேன். ஆனால் நான் ஒரு மாதத்திற்கு முன்பு தடுப்பூசி எடுத்துக்கொண்டேன். இதுவரை எந்த பாதிப்பும் எனக்கு வரவில்லை.
எனவே மக்கள் மன தைரியத்துடன் தடுப்பூசி எடுத்து கொள்ளுங்கள். தடுப்பூசி குறித்தான விபரங்களை உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அருகில் வசிப்பவர்களுக்கும் எடுத்துக் கூறுங்கள். இது நம் ஒவ்வொருவரின் கடமை. தடுப்பூசி எடுத்து கொண்டால் மட்டுமே கரோனா தொற்றிலிருந்து நாம் விரைவில் மீள முடியும்” என்றார்.