திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரம் ரைபிள் ரேஞ்ச் பகுதியில், வாடகை ஜீப்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வாடகை ஜீப் ஓட்டுநர் சங்கத்திற்கு கெளரவத் தலைவராக ராஜாமணியும் (57); இதே சங்கத்தில் உறுப்பினராக ரைபிள் ரேஞ்ச் பகுதியைச் சேர்ந்த மோகன் (45) என்பவரும் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் மோகன், சவாரிக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளிடமும் பொதுமக்களிடமும் குடிபோதையில் தவறாக நடந்துக் கொள்வதாக் கூறப்படுகின்றது.
அதன் காரணமாக வாடகை ஜீப் ஓட்டுநர் சங்கத்தில் இருந்து கெளரவத் தலைவரான ராஜாமணி அவரை நீக்கம் செய்துள்ளார். இதனால் மோகன், ராஜாமணி மீது கோபமாக இருந்து வந்துள்ளார்.
இதனிடையே நேற்று (பிப்ரவரி 20) காலை நாயுடுபுரம் பகுதிக்கு வந்த மோகன், ராஜாமணியைப் பார்த்தவுடன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை ஓட ஓட விரட்டி தலை, கை பகுதிகளில் வெட்டியுள்ளார். அருகில் இருந்த மற்ற சங்க உறுப்பினர்கள் விலக்கி, உடனடியாக ரத்தக் காயங்களுடன் இருந்த ராஜாமணியை மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக, ராஜாமணி தேனி கானாவிலக்குப் பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், நாயுடுபுரம் பகுதியில் அரிவாளுடன் இருந்த மோகனை கைது செய்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பகல் பொழுதில் நாயுடுபுரம் பகுதியில் நடந்த இந்த அரிவாள் வெட்டுச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவால் மூதாட்டிக்கு அறிவாள் வெட்டு - 4 பேர் கைது