திண்டுக்கல்: பழனியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் கார்த்தி என்பவர் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்ற பெத்தநாயக்கன்பட்டி தோட்டத்தில் விசாரணை நடத்தினர். அப்போது தோட்டத்து சாலையில் இருந்து 16 ஏர்கன் துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டன.
பின்னணியில் உண்மை: இதில் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்த கும்பகோணத்தைச்சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் இன்று (நவ.1) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது, 'பெத்தநாயக்கன்பட்டி பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் எதிர்பாராத விபத்து. துப்பாக்கி குண்டு பாய்ந்த கார்த்தி மற்றும் மோகன்ராஜ் இருவரும் ஒரே ஊரைச்சேர்ந்தவர்கள். மோகன்ராஜுக்குச்சொந்தமான ஏர்கன் எனப்படும் துப்பாக்கியை பயன்படுத்திய பொழுது எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்து கார்த்தியின் நெஞ்சுப்பகுதியில் குண்டு பாய்ந்தது.
வினையான சொந்த துப்பாக்கி: இந்த உண்மையை வெளியே சொல்லாமல் மறைத்து, யாரோ சுட்டதாக பொய்யான தகவலை போலீசாரிடம் தெரிவித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இவர்கள் பயன்படுத்திய துப்பாக்கியானது லைசென்ஸ் தேவையில்லாத துப்பாக்கி. சாதாரண விளையாட்டுத் துப்பாக்கியை வேட்டையாடுவதற்காக சிறு சிறு மாற்றங்கள் செய்துள்ளோம்' என திண்டுக்கல் எஸ்.பி. பாஸ்கரன் தெரிவித்தார்.
இதையடுத்து மோகன்ராஜ் மற்றும் அவரது நண்பர் பழனியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளதாகவும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் கார்த்தி மீது இரு கொலை வழக்குகள் பதியப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே உள்ளதும் தெரியவந்துள்ளதாகவும் திண்டுக்கல் எஸ்.பி. கூறினார்.
விசாரணை தொடரும்: இவ்வாறு துப்பாக்கியை கவனக்குறைவாகப் பயன்படுத்தி ஒருவரை காயம் செய்ததாக வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளதாகவும், மேலும் இவ்வழக்கில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளார்களா? என்று முழுமையாக விசாரணை நடத்தி வருவதாகவும் திண்டுக்கல் எஸ்.பி. பாஸ்கரன் தெரிவித்தார். ஏடிஎஸ்டி சந்திரன், பழனி டிஎஸ்பி சிவசக்தி ஆகியோர் அப்போது உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: தோட்ட காவலாளி மீது துப்பாக்கிச்சூடு - பழனியில் பயங்கரம்