சமீபத்தில் பெய்த மழை காரணமாக, கொடைக்கானல் நகரின் மலைப்பகுதியிலிருந்து பெரியகுளம் செல்லும் சாலையில் அடுக்கம் கிராமம் அருகே மண் சரிவு ஏற்பட்டும், ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தும் போக்குவரத்து தடை ஏற்பட்டது.
இதனையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் அப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவுகளை சீரமைத்துவருகின்றனர். ராட்சத பாறைகளும் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், சீரமைப்புப் பணிகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி நேரில் பார்வையிட்டு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோட்டாட்சியர் சுரேந்திரன், நெடுஞ்சாலை உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் செந்தில்குமார், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, பணிகளை விரைவாக முடிக்கும்படியும் சாமக்காட்டுபள்ளம் அருகே தொங்கும் நிலையில் உள்ள பாறையை விரைவாக அகற்ற வேண்டும் என்றும் ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் கூறுகையில், "அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் பாறையில் வெடிவைத்து அகற்றும் பணி நாளை தொடங்கி மூன்று நாள்களுக்குள் முடிக்கப்படும். விரைவாக சாலை சீர்செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் வாசிங்க : ‘திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்’ - பாஜகவிற்கு ஸ்டாலின் பதிலடி!