திண்டுக்கல்: பேகம்பூர் டி.வி.ஏ. நகரைச் சேர்ந்தவர் முகமது இஸ்ஸாக். இவரது மனைவி பஷீலா செரீன். பல் மருத்துவராக உள்ளார். இவர்களது இரண்டரை வயது மகன் முகம்மது சப்ராஸ். சிறுவன் சின்னஞ்சிறு வயதில் மழலை மொழியில் பேசியது அனைவரையும் மயங்க வைத்தது.
அதுமட்டுமல்லாமல் ஐந்து நிமிடத்தில் 14 ரைம்ஸ் மடமடவென பாடியது பார்ப்பவர்களை பரவசமடையச் செய்தது. இதையடுத்து சிறுவன் பாடிய பாடல்கள் ரெக்கார்டு செய்து சாதனை அமைப்புகளான நோபில்புக் ஆஃப் வேர்ல்டு ரிக்கார்டு, கலாம்ஸ் வேர்ல்டு ரிக்கார்டு, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த சாதனை நிறுவனங்கள் சிறுவனின் சாதனையை அங்கீகரித்து சான்றிதழும் பாராட்டும் தெரிவித்துள்ளன. சிறுவனின் தாய் பஷீலா செரீன் கூறியதாவது, “எனது மகன் ஒரு வயதாகும்போது துருதுருவென்று ஏதாவது ஒரு பாடலை பாடிக் கொண்டே இருப்பான்.
யாழ் இனிது குழல் இனிது என்பார் தம் மக்கள் இனிமை சொல் கேளாதார் என்ற வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப அதைக்கேட்டு நான் மகிழ்ச்சியடைவேன். தற்போது ஐந்து நிமிடத்தில் 14 பாடல்களைப் பாடி எங்களை மெய்சிலிர்க்க வைத்தான். இதை உலக சாதனை அமைப்புக்கு நாங்கள் அனுப்பி வைத்தோம்.
கரோனா காலம் என்பதால் ரெக்கார்ட் செய்து அனுப்பினோம். சிறுவனின் திறமையையும் ஒப்பிக்கும் அழகையும் பார்த்து மெய்மறந்து சாதனை அமைப்பு நிறுவனம் எங்களுக்கு முகமது சப்ராஸ் சாதனையை அங்கீகரித்து பரிசளித்து, பாராட்டு தெரிவித்துள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. எனது மகன் சாதனைகள் படைக்க வேண்டும் என்ற ஆசையும் எனது அடி உள்ளத்தில் எழுகிறது” என்றார்.
இதையும் படிங்க: போக்குவரத்து விதிகளை மீறும் வகையில் விளம்பரம்: நடிகர் கார்த்தி மீது புகார்