மாற்றுத்திறனாளிகள் வந்து செல்வதற்கு ஏற்ற வகையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகம் உட்பட எந்த அலுவலகத்திலும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இருப்பதால் அவர்கள் கடும் இன்னல்களை சந்தித்துவருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் பலமுறை முறையிட்டும் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அவர்கள் இன்று மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதுகுறித்து பேசிய மாற்றுத் திறனாளி பகத்சிங், ”மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அதே போல் மாற்றுத்திறனாளிகள் அதிகம் வந்து செல்லக்கூடிய மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலேயே நாங்கள் வந்து செல்வதற்கு ஏற்ற வகையில் கைப்பிடியுடன் கூடிய சாய்தளம், குடிநீர், லிஃப்ட், கழிப்பிடம், சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகள் ஏதுமில்லை.
மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி நிர்வாகம் சார்பில் செயல்படும் அலுவலகங்களிலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலான மேற்கத்திய கழிப்பறை வசதி செய்து தரப்பட வேண்டும்” என்றார்.