திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை பழனி முருகன் கோயிலுக்குச் சாதாரண நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களின் வருகைத் தந்து சாமி தரிசனம் செய்து வழக்கம். ஆனால் தற்போது பள்ளி, கல்லூரி மற்றும் கோடை விடுமுறையையொட்டி பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை தங்கத் தேர் புறப்பாட்டை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோயிலில் குவிந்ததால் பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கோயில் நிர்வாகம் திணறினர். மேலும், இந்த கட்டுக்கடங்காத கூட்டத்தால் பெண்கள் வயதானவர்கள் குழந்தைகள் என அனைவரும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினார்.
அதைத் தொடர்ந்து, படிப்பாதை, யானைப் பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் நிலையங்களிலும் பக்தர்கள் வருகை அதிகளவில் காணப்பட்டது. பகல் நேரத்தில் பக்தர்கள் கூட்டம் குறைவாகக் காணப்பட்டாலும் இரவு நேரங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையிலிருந்ததால், பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.